….சிலரது இழப்புகள் நம்மில் ஒரு பாகத்தை நாம் இழந்தது போன்ற உணர்வைத் தருகின்றன! அவ்வித இழப்புகளில் ஒன்று மோதியின் மரணம்.
அவரை அறிந்தவர்கள் எல்லாம் அவரது சீலங்களையும் பண்புகளையும் அறிவர். நல்ல மகன். நல்ல தந்தை. நல்ல நண்பர். அன்பு நிறைய உடையவர். அன்பர்களைத் தேடி அணைத்துக் கொள்பவர். நல்ல இலக்கியங்களால் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டவர்!
திரு. ஜெயகாந்தன்
புனைவியல் படைப்பிலக்கியம் நம் அனுபவங்களை இன்னும் அதிகமாக வெளிப்படுத்தும் ஊடகமாகத் திகழும் என்று நான் நினைப்பதுண்டு. ஒரு வகையில் என்னைப் படைப்பிலக்கியங்களை நோக்கித் திருப்பிவிட்ட மாற்றம் திரு. மோத்தி அவர்களால் நிகழ்ந்தது என்றே நான் நினைக்கிறேன்.
மோத்தியைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புத்தகம் நடந்து வருவது போலத்தான் எனக்குத் தோன்றும். சற்று கனமான கலைக்களஞ்சியம் போல. இப்போதுகூட அவர் இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. பலர் இருக்கின்ற போதே இல்லாத உணர்வு ஏற்படுகிறபோது இல்லாத போதும் இருக்கின்ற உணர்வை உண்டாக்குவது மகத்தான சாதனைதானே!
வெ. இறையன்பு I.A.S
நன்முத்துக்கள் கொற்கையில் மட்டுமல்ல விளைவது, திருச்சியைச் சார்ந்த மோதி ராஜகோபால் நெஞ்சிலும் விளைந்தது என்று.
நாஞ்சில் நாடன்
புகழ்பெற்ற பிரான்ஸ் சிற்பியான “Rodin” பற்றி France தேசத்து சிற்பியான மெக்கெலாஞ்சலோ பற்றியெல்லாம் அவர் பேசியது, என்னை அவரது கலையார்வத்தை பற்றியும்கல்வியறிவு பற்றியும் உணரவைத்தது.
செல்வச்சீமானாக இருந்த அவர் பணப்பெட்டி, நகைப் பெட்டிகளை விடவும் பொக்கிஷமாகக் கருத்துக் கருவூலமாக எண்ணற்ற புத்தகங்களை செல்வத்திற்கும் மேலாக வீட்டிலே பேணிக் காத்ததைக் கண்ட எனக்கு அவர் மீது அளவில்லாத மரியாதை உண்டானது. அப்படிப்பட்ட உயர்ந்த கல்வியாளர் அவர்.
ஜெயக்குமார். (J.K.) ஓவியர் கலை இயக்குனர்
மோத்தி – தமிழ் பிரசுர உலகில் ஒரு சகாப்தம்
அவரில்லாவிட்டால் மோத்தி பிரசுரம் பிறந்திருக்காது. அதற்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பல மலிவு விலை நாவல் பிரசுரங்களுக்கு அதுதான் முன்னோடி. அந்த வகையில் அது ஒரு சகாப்தம்.
நர்மதா ராமலிங்கம், சென்னை
தந்தையாடு கல்விப்போம் என்ற பழமொழி இவருக்கு பொருந்தாது. பெரியார் முதலாக ஜெயகாந்தன் உட்பட பெரியவர்கள், அறிஞர் பெருமக்கள், நேரில் சென்று பார்த்துப் பழகி அறிவை அகலப்படுத்திக் கொண்டே (விரிவுபடுத்திக் கொண்டே) ஒரு இளம்பருவ மேதையாக ராஜகோபால் அந்நாளில் (1960-களில்) திகழ்ந்தார்.
புத்தர் ஞானம் பெறுவதற்கு முன் அளிக்கப்பட்ட விருந்து சுஜாதையின் பால் பாயாசம், நாம் துறவு பூண்ட பின் அளிக்கப்பட்ட முதல் விருந்து மோத்தி ராஜகோபால் வீட்டில் தான். அதுவும் அன்று எம்மோடு உடனிருந்து விருந்திருந்தியவர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள். எங்கள் இருவருக்கும் விருந்து அளித்தவர் திருச்சிராப்பள்ளி மோத்தி ராஜகோபால்.
தவத்திரு. ஊரன் அடிகளார், வடலூர்
உன்னதத்திற்குத் தூண்டுதலாக இருந்தவர் மோதி ராஜகோபால். மோதி என்ற சொல்லுக்கு முத்து என்று பொருள். இவ்வன்பர் ஓர் முத்து. ஆம், ஆனிமுத்து, சகஹ்ருதயர்களைக் கண்டு கொள்வதிலும், இணைத்து வைப்பதிலும் மோதி குறிப்பாக இருந்து வந்தார்.
சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன், தஞ்சாவூர்
மோதி ராஜகோபால் ஒரு சர்வதேச படிப்பாளி. உலகத்தில் முக்கியமான புத்தகம் எல்லாம் அவர் படித்து இருந்தார். இலக்கியம் போலவே அவருக்கு சரித்திரம், தத்துவம், உளவியல் நூல்களில் அதிகமான அக்கறையும், ஈடுபாடும் இருந்தது. அவர் படிப்பு அர்ப்பணிப்பானது. அவர் தனக்காகவே படித்தார். அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு சந்தோஷப்பட்டார்.
நல்ல புத்தகத்தின் முதல் வாசகர் அவர். படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் பண்பாளர். பல புத்தகங்களை நான் அவர் மூலமாகத் தெரிந்து படித்தேன். அவை ஒருபொழுதும் ஏமாற்றவில்லை.
Writer சா. கந்தசாமி, சென்னை
தோழர் ஜெயகாந்தன் மூலமாகவும் அவர் சபை மூலமாகவும் நான் அறிந்த இலக்கியவாதிகள், இலக்கிய அன்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனேகம் பேர் உண்டு. அதில் முதல் தரமான இலக்கிய அபிமானி அருமை நண்பர் மோதி ராஜகோபால் அவர்கள்.
பரிணாமன்
அய்யன் திருவள்ளுவர் கூறும்,
“அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பூன்றிய தூண்”
என்னும் குறளுக்கு ஓர் ஒப்பற்ற விளக்கமாய் அமைந்தது தான் அவருடைய வாழ்க்கை.
அறிவிலே தெளிவு
நெஞ்சிலே துணிவு
செயலிலே கனிவு
ஓயாத உழைப்பு
தளராத தன்னம்பிக்கை
மங்காத மனிதநேயம்
ஆகியவற்றின் கூட்டுக் கலவை தான் அமரர் மோதி ராஜகோபால் அவர்கள்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”
என்னும் அய்யன் திருவள்ளுவர் வாக்கு சாத்தியமானால் அமரர் மோதி ராஜகோபால் இறைவனுடைய திருவடியில் ஒன்று கலந்திருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கலைமாமணி, முனைவர் நாவுக்கரசர், சோ.சத்தியசீலன்
ரசிக்கத்தக்க சுகவாசி ரசனையாளர்களின் சகவாசி
பெயரளவில் அறிமுகமானவர்கள் தொடங்கி, உயிரளவில் நெருக்கமானவர்கள் வரை, “அற்புதமான மனுஷன் சார்” என்று சொல்லும் அளவுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் திரு. மோதி ராஜகோபால் அவர்கள்.
நாவுக்கரசர், சோ.சத்திய சீலன் அய்யா அவர்களை எப்போது சந்தித்தாலும் “எங்க செக்ரட்டரி சார் உங்களைப் பத்தி ரொம்ப பெருமையா சொல்வார்” என்பார். நல்ல நூல்களைத் தேடிப்பிடித்து தானிருக்கும் இடமே தெரியாமல் – அதே நேரம், “நானிருக்கிறேன் உங்களுக்கு” என்று சொல்லாமல் சொல்லும் நிறைய நேசராக விளங்கினார் அவர்.
கலைமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா
எங்கள் இருவரின் தகப்பனார்களின் பெயர் மோதி ஸ்ரீராமுலு செட்டியார் என்று வைத்தார்கள்.
என் தந்தை வயதில் மூத்தவராக இருந்ததால் மோதி ராஜகோபால் தகப்பனாரை ஊரில் யாவரும்
சின்ன-ஸ்ரீராமுலு என்று அன்போடு அழைப்பார்கள். மோதி குடும்பத்திற்கு ஒரு விழி வெளிச்சமாக நம் தகப்பனார்கள் திகழ்ந்தனர்.
மோதி ராஜகோபால் இல்லத்திற்கு உகந்தவர்களான அரிய பொக்கிஷமாக எல்லாவித புத்தகங்களும் அவரை வந்தடைந்தன. ஒரு நாள் நிலையம் போல் அவருடைய இல்லம் மாறியது. புத்தகங்களை தான் மட்டும் படித்து பயனடையாமல் நண்பர்களுடன் இணைந்து உலக அறிவை விருத்தி செய்து கொண்டார். அத்துடன் இல்லாமல் தன் தகப்பனார் ஆரம்பித்த செய்து வந்த தானதர்மங்களையும் கோயில் கைங்கர்யங்களையும் செவ்வனே செய்து வந்தார். ஏழைகளுக்கு கல்வி உதவித் தொகைகளை அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தார். குறிப்பாக கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், பெரியகடை வீதி அங்காளம்மன் கோயில்,
நண்பர்களுடன் பழகுவதில் அவருக்கு நிகர் அவரே. குறிப்பறிந்து எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டுவதில் வல்லவர். அவருடைய விருந்தோம்பல், அறிவுத்திறன், வியாபாரத்திறமை பெற்ற பண்பாளர் நமது மோதி ராஜகோபால். எங்கள் ஆர்ய வைஸ்ய சமூகத்திற்கு ஒரு கல்வரை விளக்கம்போல் திகழ்ந்து வந்தார். எல்லோரும் மெச்சும்படி வாழ்க்கையை நடத்திக் காட்டியுள்ளார்.